கார் விபத்தில் பெண் எம்எல்ஏ மரணம் என்ன நடந்தது .....
தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தானது ஹைதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓஆர்ஆர் பகுதியில் நடைபெற்றுள்ளது. அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே இருந்த டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கார் விபத்தில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா நந்திதா தப்பினார். அவர் பயணித்த கார் மீது ஆட்டோ மோதியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பத்து நாட்களில் மற்றொரு சாலை விபத்தில் லாஸ்ய நந்திதா இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சயன்னா ஓராண்டுக்கு முன்பு இறந்தததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.