தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 7வது தெரு பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லை மக்கள் கடும் அவதி சீரமைத்து தர கோரிக்கை.
தூத்துக்குடி மாநகராட்சி, 4வது வார்டுகுட்டப்பட்ட சுந்தரவேல்புரம் 7வது தெருவில் குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி, சுந்தரவேல் புரம் ஏழாவது தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றுள்ளது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிதண்ணீர் வராமல் இருந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடமும் பல்வேறு முறை புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் குடிநீர் குழாய்களில் நாளும் முழுவதும் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- சுந்தரவேல்புரம் 7வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. பின்னர் மழை பெய்த்தன் காரணமாக அந்தப் பணி பாதியிலே நிறுத்தப்பட்டு பாதுகாப்பு காரணமாக குழி மூடப்பட்டது.
அதிலிருந்து தங்களுக்கு குடிதண்ணீர் வராமல் இருந்துள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தின் போது அமைச்சர் கீதா ஜீவன் அப்பகுதியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடும் செய்யும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் கூறினார். ஆனால் அதன் பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள், கவுன்சிலர் மெத்தனம் காட்டி வருவது தங்களுக்கு வேதனை அளிப்பதாக கூறினர்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.