திருமணமான 3 நாட்களில் புது மண தம்பதியர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 3 நாட்களில் புது மண தம்பதியர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மேல ஆத்தூர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் மகன் பழனிகுமார் (30). இவர் கேரளாவில் இரும்புகடை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் தூத்துக்குடி முள்ளக்காடு ராமைய்யா மகள் முத்துமாரி (21) என்பவருக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. நேற்று மாலை புதுமணத் தம்பதியர் மேல ஆத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு செல்ஃபி எடுத்தபோது முத்துமாரி கால் தவறி நீர்தேக்கத்தில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கினார். இருவரும் மூச்சுத்தினறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இதனிடையே புதுமணத் தம்பதியர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் வந்தபோது அங்கு 2 சடலங்கள் மிதப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தூத்துக்குடி சார் ஆட்சியர் கெளரவ் குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடி, மேல ஆத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.