காவல்துறையை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!.

காவல்துறையை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!.

டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் வேளாண் விரோத நடவடிக்கையை கண்டித்து நடைபெற்ற நாடு தழுவிய  டிராக்டர்  பேரணிக்கு தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தில் அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து புதன்கிழமை அன்று தூத்துக்குடி சிக்னல் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை வகித்தனர் கடம்பாகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் உத்திரம் தமிழக விவசாயிகள் சங்கம் சரவண முத்துவேல் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் அருள்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன் மாநில பொருளாளர் கே பி பெருமாள் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராகவன் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கணபதி, நடராஜன், சங்கரன், செல்வராஜ், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன் மாநில குழு உறுப்பினர் ஞானசேகர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையா மாநில குழு உறுப்பினர் லெனின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கேபி பெருமாள் கூறுகையில் ;

தமிழ்நாடு முழுவதும்  பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தில் மட்டும் மாவட்ட காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் விவசாயிகளை கைது செய்து இரவு வெகு நேரமாக விடுதலை செய்யமால்  மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.  தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் இயக்கங்களுக்கு அனுமதி மறுத்தும், இடையூறு செய்தும் வருகிறது, வரும் காலங்களில் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் விவசாயிகளை திரட்டி நடத்தப்படும் என கூறினார்.