தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ரமேஷ் பாண்டியன் கோரிக்கை!
இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாருக்கு அனுப்பி உள்ள மனுவில் "தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் சாலைகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்ற வகையில் நிறுத்தி செல்கின்றனர்.
மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் திணறி வருகின்றது. இதே பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுற்ற நிலையில் இதுவரை திறக்கப்படாததால், பெரிய காய்கறி மார்க்கெட் மற்றும் அதன் அருகிலுள்ள பூ மார்க்கெட்க்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் சாலையோரங்களில், பொதுமக்கள் செல்முடியாத அளவிற்கு இடையூறாக நிறுத்தி செல்லுகின்றனர்.
மேலும் தூத்துக்குடியில் பிரதான சாலைகளான தமிழ்ச்சாலை, கிரேட் காட்டன் ரோடு, பழைய மாநகராட்சி விஇ ரோடு, சிதம்பரம் நகர், புதிய பேருந்து நிலையம், போல்பேட்டை உள்பட பிரதான சாலைகளின் இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே வாகனங்களை இடது புறத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், இந்தப் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவுற்ற சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு ஜெயராஜ் ரோட்டில் உள்ள வாகன காப்பகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ரமேஷ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.