ஓட்டப்பிடாரத்தில் செம்மரங்கள் வெட்ட அனுமதி கோரிய மனு தள்ளுபடி!.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா ஓட்டப்பிடாரம் கிராமத்தில் உள்ள சர்வே எண்: 699 ல் 14 செம்மரங்களும், சர்வே எண்: 700 ல் 60 செம்மரங்களும், சர்வே எண்: 704/3 ல் 30 செம்மரங்களும், சர்வே எண்: 701/1 ல் 67 செம்மரங்களும், 711/1A ல் 24 செம்மரங்களும் என மேற்பட்ட நிலப்பரப்பில் சுமார் 195 செம்மரங்கள் உள்ளன. தற்போது இந்த நிலப்பரப்பானது Amazo solar farm LLP company எனும் பெயரில் உள்ளது.
ஓட்டப்பிடாரத்தில் உள்ள மொத்த 195 செம்மரங்களை மரம் ஒன்றுக்கு ₹20,000 வீதம் வெட்டி எடுத்திட சென்னையில் உள்ள தனியார் RMV International Traders நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வன அலுவலரால் கடந்த 10.12.2024 அன்று அனுமதியளிக்கபட்டு பின்னர் பல்வேறு விதிமீறல்கள், விவசாயிகளின் நில அளவை புகார் மனுக்கள் மற்றும் தவறான ஒப்பந்த ஆவணங்கள் அடிப்படையில் கடந்த 24.12.2024 அன்று செம்மரங்களை வெட்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட செம்மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையி்ல amazo solar farm LLP company க்கு தனது நிலங்களை எல்லை வரையறையின்றி, முறைகேடான வகையில் விற்பனை செய்த கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கிரி என்பவர் செம்மரங்களை வெட்ட அனுமதிக்கக் கோரியும் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலரின் தடையாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஜனவரி மாதம் வழக்கு தொடுத்திருந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையானது நீதிபதி விவேக் குமார் சிங் தலைமையில் நடைபெற்றது.
விசாரணை உத்தரவில் "இயற்கையை அழிக்கக்கூடாது, சாதரண மரங்களை வெட்ட பல்வேறு சட்டதிட்டங்கள் உள்ள நிலையில் செம்மரங்களை வெட்ட ஒருபோதும் அனுமதிக்க முடியாது மேலும் பிரச்சினைக்குரிய நிலப்பரப்பினை கொண்டுள்ளதாலும், வருவாய்த்துறை அதிகாரிகளின் நடைமுறைகளை மனுதாரர் முறையாக பின்பற்றவில்லை எனவும் விவசாய நிலப்பரப்பை சீரழிக்கும் நோக்கில் தவறான வழிகாட்டுதலை கொண்டுள்ளதாலும் அவ்விடத்தில் உள்ள செம்மரங்களை வெட்ட அனுமதி மறுப்பதாக வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.