சீட் இல்ல.. இதை வாங்கிக்கங்க.. ஜவாஹிருல்லாவை சமாதானப்படுத்திய ஸ்டாலின்

சீட் இல்ல.. இதை வாங்கிக்கங்க..  ஜவாஹிருல்லாவை சமாதானப்படுத்திய ஸ்டாலின்

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சீட் கேட்டு வந்த நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ அப்துல் சமது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ அப்துல் சமது ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஹஜ் குழுசட்டம், 2002-ன்படி, ( மைய சட்டம் 35/2002) தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அரசாணை நிலை எண் 44, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை நாள் 15.06.2023-ல், 16 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டது.

ஹஜ் கமிட்டி தலைவர்: தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (ம) வனத்துறை கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத் துறையின் செயலாளர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக பி. அப்துல் சமத், எம்.எல்.ஏ., அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாணை (ப) எண் 22 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, நாள் 22.02.2024-ன்படி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் அப்துல் சமது.

திமுக கூட்டணி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, தங்களுக்கு ஒரு எம்.பி சீட் ஒதுக்க வேண்டும் என மமக வலியுறுத்தி வந்தது.

எங்களுக்கு 1 சீட் கண்டிப்பா வேணும்.. திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் மனிதநேய மக்கள் கட்சி!

சமாதானம் செய்த ஸ்டாலின்: அண்மையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் சென்னையில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கண்டிப்பாக மமக கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏவுக்கு ஹஜ் குழு தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுக கூட்டணியில் போட்டியிட சீட் கேட்ட ஜவாஹிருல்லாவை சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம், இப்போதைக்கு ஹஜ் தலைவர் பதவி தருகிறேன் எனக் கூறி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சமாதானம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்