தூத்துக்குடி மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உப்பாற்று ஓடை தூர் வாரும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை ரவுண்டானா அருகில் உள்ள உப்பாற்று ஓடையில் மழை வெள்ளநீர் நகர் பகுதிகளில் உட்புகுவதைத் தடுக்கும் வகையிலும், கோரம்பள்ளம் குளத்தின் உபரி வெள்ளநீர் தடையின்றி கடலில் கலக்கும் வகையில் உப்பாற்று ஓடைபகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகள், மணல் திட்டுகளை அகற்றியும், கரைகளை பலப்படுத்தி 6 கிலோமீட்டர் தூரத்திற்கு துறைமுகம் கடற்கரை வரை தூர்வாரும் பணிகளை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் வடி நில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் பாலமுருகன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, முத்தையாபுரம் பகுதி திமுக செயலாளர் மேகநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை மற்றும் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.