தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது.

இன்று 10.07.2024 மில்லர் புரம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 15 முதல் 19, 30 முதல் 37, 42, 44 மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 50 , 51 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கான குறைகள் தீர்க்கும் முகாமை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

முகாமில் மேயர் பேசுகையில்; மரம் வளர்ப்போம் பிளாஸ்டிக் தவிர்ப்போம், தூத்துக்குடியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் பக்கிள் கால்வாய் உள்ளது. இதில் வீடுகளில் இருந்து கொட்டப்படும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் சாக்குகளால் தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்து உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பு பாலிதீன் பைகளை பயன்படுத்தும் கடைகளில் பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. மேலும் பாலிதீன் பைகளின் பயன்பாட்டை தவிர்க்க ஒரு லட்சம் மஞ்சள் பைகளை மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்துள்ளோம். தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் பாலிதீன் பைகளை கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்திட வேண்டும், இல்லை என்றால் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பார்கள். 

தூத்துக்குடி பி அன்ட் டி காலனியில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முத்தம்மாள் காலனியில் இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

தூத்துக்குடி நகர் முழுவதும் 2000 சாலைகள் போடப்பட்டுள்ளது. 2887 தெருவிளக்குகள் அமைத்துள்ளோம். பாதாள சாக்கடை திட்ட பணிகள் 15,16,17 வார்டுகளில் விரைந்து நடைபெற்று வருகிறது.156 பூங்காக்கள் கட்டமைத்து சிறப்பான முறையில் பராமரிக்க பட்டுவருகிறது. முக்கியமாக காலி மனைகளின் உரிமையாளர்கள் தங்களது நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றுமாறு பத்திரிகை வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். மேலும் மாநகரப் பகுதியில் முட்செடிகளை அகற்றும் பணிகளை விரைந்து செயல்படுத்த உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இம்முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் திட்டம் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், மாநகர துணை செயற்பொறியாளர் சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் சுரேஷ்குமார், மாநகர சுகாதார அலுவலர் பொறுப்பு தினேஷ், இளநிலை பொறியாளர்கள் சேகர், பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ் கந்தசாமி இசக்கி ராஜா, பொன்னப்பன், சந்திரபோஸ், ஜான் சீனிவாசன், பாப்பாத்தி அம்மாள், சரவணகுமார், ராமர் விஜயலட்சுமிமற்றும் பகுதி செயலாளர் ரவீந்திரன், பிரதிநிதி துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.