மாப்பிள்ளையூரணி : பேருந்து பயணியர் நிழற்குடை அடிக்கலோடு நிற்கும் அவலநிலை - பொதுமக்கள் அவதி!
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அடிக்கல் நாட்டி மாதங்கள் கடந்த நிலையில், பணிகள் இன்னும் தொடங்காத அவலநிலையே உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கோமஸ்புரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பயணிகள் நிழற்குடை அமைக்க 5.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நாட்டி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான ஒரு செங்கலை கூட நட்டு வைக்கும் பணி என்பது நடைபெறவில்லை. பொதுமக்களும் பேருந்திற்காக பயணிகள் நிழற்குடையின்றி வெயில் காத்திருந்து கஷ்டப்பட வேண்டிய அவலநிலையே இன்னும் தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அடிக்கல் நாட்டும் பணிகள் எல்லாம் வேகமாக நடைபெற்றாலும், அதற்கு பின் உள்ள பணிகள் ஆமைவேகத்திலே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.