சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 68 நினைவு தினம் - தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய கனிமொழி கருணாநிதி எம்பி!.

அண்ணல் அம்பேத்கர் கையளித்து சென்ற அரசியலமைப்பை அனைவருக்குமான சமூகநீதியாகத் தொடரும் வகையில் பாதுகாத்து நிற்போம்; நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி உறுதி!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையற்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு வீட்டு மனைப்பட்டா, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, தாட்கோ லோன், உள்ளிட்ட 8 துறைகளின் சார்பில் 370 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 86 இலட்சத்து 20 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழா நடைபெற்ற அரங்கில் தூத்துக்குடி, கோவில்பட்டி, காயல்பட்டிணம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை உணவான அசைவ பிரியாணியுடன் சிக்கன் பொறியல், அவித்த முட்டையுடன், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பலவகை உணவுகள் சுமார் 600 பேருக்கு மாநகராட்சி சார்பில் ஏற்பட்டு செய்யப்பட்டது. அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களைப் பாராட்டும் விதமாக அவர்களுடன் மதிய உணவினை கனிமொழி கருணாநிதி எம்.பி அமர்ந்து உணவருந்தினார்.
இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் பயனாளிகளிடம் உரையாற்றினார். குறிப்பாக, பேரிடர் உட்பட அனைத்து நாட்களிலும் சேவையாற்றும் தூய்மைப் பணியாளர்களை, தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதை விட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் எனப் போற்றுவது பெருமைக்குரியது.
இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: திராவிட முன்னேற்றக் கழக அரசு ஒடுக்கப்பட்ட மக்களோடு பயணம் செய்யக்கூடிய, அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தக்கூடிய அரசாக இருந்து வருகிறது. நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட போது, திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று பலர் கேட்டனர்? அனைவருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அடிப்படை என்னவென்றால் எல்லோருக்கும் படிப்பு, வேலை வாய்ப்பு, சமூகத்தில் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்பதுதான்.
அதேபோல, திமுக ஆட்சியில் யாரையும் நிராகரிக்காத ஒரு கலாச்சாரத்தை, ஒரு பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறோம். ஏனென்றால், சில கட்சிகள் அரசியல் என்பது மக்களைப் பிளவுபடுத்தி, ஒருமைப்பாட்டை சீர்குலைத்து சுய லாபம் அடைவதைக் குறிக்கோளாக செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் அனைவரையும் இணைப்பதற்கான பெரும் முயற்சியைத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் செய்துகொண்டு இருக்கின்றது.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். மத்திய பிரதேசத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த அம்பேத்கர், அந்த சமூகத்தில் இருந்து இந்தியாவிலேயே முதல்முறையாக வெளிநாட்டிற்கு சென்று பட்டப் படிப்பைப் படித்துவிட்டு வெற்றிகரமாக நாடு திரும்பினார். எந்த சமூகத்தில் பல சட்டங்களைக் காட்டி, பரம்பரை பரம்பரையாக இவற்றை பின்பற்றி வருகிறோம், அதனால், நீங்கள் இந்த கிணற்றுத் தண்ணீரை அருந்த முடியாது, இந்த குளத்தில் கால் நனைக்கக் கூடாது, இந்த தெருவில் நடக்கக் கூடாது என்று கூறினார்கள்.
அந்த சமூகத்தில் பிறந்த ஒரு இளைஞனை இந்த நாட்டிற்கே சட்டம் எழுதக்கூடிய அளவுக்கு உயர்த்தியது அவர் பெற்ற கல்வி தான். இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஜாதி, மதம் என்ற எந்த பிரிவினைகளும் இருக்காது. ஜாதி என்பது ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு. ஏனென்றால், இன்றைய நவீன கண்டுபிடிப்புகளும், அறிவியலும் என்ன சொல்கிறது என்றால் மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி, இந்த உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி இருக்கிறது. ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களுக்கு எப்படி ஜாதி இருக்க முடியும்?
இப்படிப்பட்ட சமூகத்தில், சில பேரால் அவர்களுக்கு சாதகமாக கட்டமைக்கப்பட்ட ஒரு அம்சம் தான் ஜாதி. மக்களை வேறுபடுத்தி, பிளவுபடுத்தி அடிமைகளாக நிர்வகிக்கப்பட்ட அந்த கட்டமைப்பை உடைத்தவர் தான் அண்ணல் அம்பேத்கர். அவர் வழியில் திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அண்ணல் அம்பேத்கரை போற்றக்கூடிய இந்த நாளில், அவர் நமக்காக கையளித்து சென்ற அரசியலமைப்பை எல்லோருக்கும் சமமான சமூகநீதி சாசனமாகத் தொடரும் வகையில் பாதுகாத்து நிற்போம் என்று பேசினார்.