தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் - ஆட்சியர் அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு.
வருவாய்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் - தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகங்களில் அலுவல் பாதிப்பு.
திங்கள் கிழமையான இன்று(26.02.2024) வருவாய்துறை அலுவலர்கள் 'அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மனு கொடுக்க வந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கபட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப்ப பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர்/முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும், இளநிலை உதவியாளர்/தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஜீப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஜீப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும், 2024-பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனே வழங்கிட வேண்டும், உங்கள் ஊரில் உங்களைத் தேடி, மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப்பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதைத் தவிர்த்து திட்டப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கைவிடுத்து வருகிறது. கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2023 சென்னையில் தொடங்கிய இக்கோரிக்கை போராட்டங்கள் இதுவரை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் திங்கள் கிழமை மனுநீதிநாளான இன்று வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுவில் சீல் அடித்து ஆட்சியரிடம் அனுப்பும் வேலையை செய்ய கூட ஆட்கள் இல்லாமல், பொதுமக்கள் நேரடியாக ஆட்சியரிடம் சென்றனர். அங்கே எந்த துறைக்கான கோரிக்கை என்பதை மட்டும் பார்த்து பிரித்து கொடுக்கும் வேலைகள் மட்டும் நடந்தனர். மனு அளித்தவர்களுக்கு எந்தவித சீட்டும் அளிக்கப்படவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகல் பரபரப்பாக காணப்பட்டது. பணியை புறக்கணித்த அலுவலர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.