முள்ளக்காடு ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த ஊர் மக்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்.
தூத்துக்குடி, ஜன.27-
தூத்துக்குடி மாநகராட்சியுடன் புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், முள்ளக்காடு ஆகிய 7 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணை அண்மையில் வெளியிட்டது.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி முள்ளக்காடு ஊராட்சியில் உப்பளம், விவசாயம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்து உள்ளனர்,
இந்தப் பகுதியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு முள்ளக்காடு ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ராமலட்சுமி மற்றும் யூனியன் பார்வையாளர் மணிகண்டன், கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் முள்ளக்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் பகுதியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை அப்பகுதி பொதுமக்கள் புறக்கணித்து மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
இதில் அப்பகுதியை சார்ந்த விவசாய சங்கத்தினர், முள்ளக்காடு உச்சிமாகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சின்னராஜ் என்ற ரகுபதி, உப்பு உற்பத்தியாளர் சிவாகர்,பொட்டல்காடு ஊர் தலைவர் ஜெயகிருஷ்ணன், ஆனந்த் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.