ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயக்குறிச்சி வழியாக நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்துகளை தடையின்றி இயக்கவேண்டும் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அசாருதீன், மாவட்ட செயலாளர் சுலைமான் ஆகியோரது தலைமையில் கொங்கராயக்குறிச்சி கிளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஊர்பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயக்குறிச்சியில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற தேவைகளுக்காக நாள்தோறும் நெல்லை, பாளை, ஸ்ரீவைகுண்டம், நாசரேத், திருச்செந்தூர், சாயர்புரம் போன்ற பகுதிகளுக்கே சென்று வருகின்றனர்.
கொங்கராயக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தெற்குதோழப்பன்பண்ணை, கொங்கராயக்குறிச்சி, அராபத் நகர், ஆறாம்பண்ணை, நடுவக்குறிச்சி, மணக்கரை, கிள்ளிகுளம் வேளாண்மைக்கல்லூரி, வல்லநாடு வழியாக நெல்லைக்கு 16பி, 16இ என்ற தடம் எண் கொண்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் கடந்த சில மாதங்களாக சரியான முறையில் இயக்கப்படுவதில்லை.
திடீரென நிறுத்தப்படுவதால் இந்த அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பணிக்கு செல்பவர்கள், நோயாளிகள், விவசாயிகள் என அனைத்துதரப்பினரும் தினமும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பேருந்துகள் இயக்கப்படாத நேரங்களில் பொதுமக்கள் 3கிலோமீட்டர் தூரம் நடந்து கருங்குளம் சென்று அங்கிருந்து பேருந்து ஏறும் அவல நிலையும் நீடித்து வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் பணிமனை போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கொங்கராயக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள், மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 16இ, 16பி அரசு பேருந்துகளை நாள்தோறும் முறையாக தடையில்லாமல் இயங்கிட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
நிகழ்ச்சியில் கிளைச்செயலாளர் சுகுணாமன்சூர், முன்னாள் நிர்வாகிகள் இஸ்மாயில், மீரான், பீர்முகமது, ஷேக்முகம்மதுஅலி மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.