தூத்துக்குடியில் 10 ஆண்டுகளாக ஜாமியா பள்ளிக்கு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வஃப்பு வாரிய தலைவரை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்.

பரபரப்பு.
துாத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அரபிக் கல்லுாரியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி., நேற்று வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிவாசல் நுழைவு வாயில் முன் பல் வேறு ஜமாஅத் நிர்வாகிகள் கருப்புக் கொடியுடன் திரண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகக் குழு தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிவாசல் நிர்வாகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியபடி, நவாஸ் கனி எம்.பி.,யை முற்றுகையிட முயன்றனர். போலீசாரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்களும் நவாஸ் கனி எம்.பி.,யை பாதுகாப்பாக பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீ சார் தடுக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜமாஅத் முன்னாள் நிர்வாகியான சம்சுதீன் கூறியதாவது, துாத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் 21 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு, கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டு வந்த அட்ஹாக் கமிட்டியின் காலம், கடந்த 23ல் முடிந்துவிட்டது. தேர்தலை நடத்தாமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்களை பள்ளிவாசல் பொறுப்புக்கு கொண்டு வர, வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி.. முயற்சி செய்கிறார்.
அவருக்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் துணையாக செயல்பட்டு வருகின்றனர். அனைத்து ஜமா அத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இல்லையென்றால், வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம். இது தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 13 ஜமா-அத்களிலும் அறிவிப்பு பலகை வைக்க உள்ளோம் என்றனர்.
போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ். டி.பி.ஐ.., உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.