ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் வ.உ.சி துறைமுகத்துடன் இணைந்து சென்னை மெரினா போன்று தூத்துக்குடியில் கடற்கரை பூங்கா மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.
தூத்துக்குடி;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் கலைச்செல்வி, உதவி ஆணையர் ஸ்வர்ணலதா முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.
முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி; மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் மனுக்களாக பெற்று அதனை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு கண்டு வருகிறோம்.
தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இரண்டு கடற்கரை பூங்காக்கள் அமைக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடிக்கு கூடுதலாக ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் வ.உ.சி துறைமுகத்துடன் இணைந்து சென்னை மெரினா போன்று கடற்கரை பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பாலீத்தின் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாநகரின் முக்கிய பகுதிகளில் மாஸ் கிளீனிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் சாலையை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்தும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக மேயர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் எம்.சி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸிலின், பேபி ஏஞ்சலின், மரிய கீதா, எடின்டா, தனலெட்சுமி, மகேஷ்வரி, சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.