காற்றாலை நிறுவனங்களை கண்டித்து தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு; பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு!.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் காற்றாலை நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அரசு அனுமதி இல்லாமல் நடப்படும் போஸ்ட்களை அகற்ற வேண்டும் எனவும், வருகிற 26.01.2023 குடியரசு தினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டத்தை 25 ஊராட்சி மன்ற தலைவர்கள் புறக்கணிக்க முடிவு செய்தனர்.
இது தொடர்பாக, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து 25 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் காற்றாலை நிறுவனத்தின் மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டமானது, ஊராட்சி உதவி இயக்குநர் சாந்தி தலைமையில், தாசில்தார் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குலசேகரநல்லூர், சில்லாநத்தம், ஓட்டப்பிடாரம், இராஜாவின்கோவில், சாமிநத்தம், பாஞ்சாலங்குறிச்சி, வேடநத்தம், தருவைக்குளம், குதிரைக்குளம், மருதன்வாழ்வு S. கைலாசபுரம், பசுவந்தனை, ஐம்புலிங்காபுரம், கொல்லம்பரும்பு, கொல்லங்கிணறு, கலப்பைப்பட்டி, சில்லாங்குளம், கச்சேரிதளவாய்புரம், துரைச்சாமிபுரம், ஒட்டநத்தம், நாகம்பட்டி, மேலபாண்டியாபுரம், அகிலாண்டபுரம், பாறைக்குட்டம், வாலசமுத்திரம் ஆகிய 25 கிராம பஞ்சாயத்துகளில் காற்றாலை நிறுவனங்கள் எவ்வித அரசு அனுமதி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒப்புதல் இல்லாமல் காற்றாலைகளை அமைத்து வருகிறது.
அரசு மற்றும் புறம்போக்கு ஓடைகள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பொதுப்பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வெளிமாநில தொழிலாளர்களை வைத்து ஊராட்சி பகுதிகளில் அமைத்து வருகின்றனர்.
இதனால் ஊராட்சிப் பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும் சேதமடைந்து பொதுமக்கள் பாதைகளை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றாலை நிறுவனங்களாளினாலும் , அரசு புறம்போக்கு இட ஆக்கிரமிப்பினாலும் பெரிய அளவில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கிராம ஊராட்சி தனி அலுவலர் காலத்தில் அமைக்கப் பெற்ற காற்றாலைக்கு முறையாக எவ்வித தொழில் வரியும், காற்றாலை நிறுவனங்கள் கட்டுவதில்லை. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உரிய மரியாதையும் காற்றாலை நிறுவனங்கள் தருவதில்லை. ஊராட்சி பகுதியில் உரிய அனுமதியில்லாமல் நடைபெறும் காற்றாலை பணிகள் மற்றும் ஊராட்சி மன்ற அனுமதியில்லாமல் நடைபெறும் காற்றாலை பணிகளை உடனடியாக நிறுத்தி போஸ்ட்களை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி மறுக்கும் பட்சத்தில், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்கள்.
பின்னர், இது குறித்து ஊராட்சி உதவி இயக்குநர் சாந்தி காற்றலை மேலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக காற்றலை மேலாளர்கள் கூறிய நிலையில், கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளுக்கு சொந்தமான சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லாதபடி செக்போஸ்ட் அமைத்துக் கொள்ளவும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபை கூட்டம் நடந்த பின்பும் காற்றலை நிறுவனம் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டால் 61 கிராம பஞ்சாயத்து சார்ந்த 2000 விவசாயிகளை திரட்டி யூனியன் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என குலசேகரநல்லூர் பஞ்சாயத்து தலைவரும் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவருமான வேலாயுதசாமி கூறினார்.